சம்பளம் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார் டி.டி.வி.தினகரன் - அமைச்சர் செல்லூர் ராஜூ

50 ஆயிரம் பேருக்கு சம்பளம் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார் டி.டி.வி.தினகரன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

Update: 2018-09-17 23:00 GMT

மதுரை,

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 110–வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மதுரையில் கடல் வெள்ளம்போல் திரண்டு அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். அவருடைய புகழை இந்த உலகிற்கு எடுத்து சொல்லும் விதமாக இந்த கூட்டம் உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தற்போது இந்த ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக கூறுகிறார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் நடந்த சட்டம்–ஒழுங்கு சீர்கேட்டை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தற்போது கூட தி.மு.க. ஆட்சியில் இல்லையென்றாலும், ரவுடி செயல்களை அந்த கட்சி இன்னும் குறைக்கவில்லை. இந்த ஒரு ஆண்டில் மட்டும் அரசுக்கு எதிராக 33 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதை எல்லாம் தகர்த்து எறிந்து மக்களுக்கான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 51.4 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் வெறும் 10.7 சதவீதம் தான் உள்ளது. தேசிய குறியீட்டை காட்டிலும் 40.7 சதவீதம் குறைவாக உள்ளது. அது மட்டுமல்லாது கடந்த 7 ஆண்டுகளில் 1,49,247 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,17,884 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 72 சதவீதம் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 67 சதவீதம் சொத்துகள் மீட்கப்பட்டுஉள்ளது. எனவே ஸ்டாலின் எதையும் ஆராயாமல் பேசக்கூடாது. இதே தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் விகிதாசாரம் அதிகரித்து கொண்டு தான் இருந்தது.

உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்தி வரும் இந்த அரசைப்பார்த்து ஊழல் என்று கூறிவருகின்றனர். தற்போது உள்ளாட்சித்துறையில் 3 விருதுகள் தமிழக அரசு பெற்றுள்ளது, அது மட்டுமல்லாது கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.7,500 கோடியில் தான் திட்டப்பணிகள் செய்யப்பட்டுஉள்ளது. ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் தற்போது வரை ரூ.25 ஆயிரம் கோடி அளவில் மக்களுக்காக திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

உதிரிக்கட்சி ஆரம்பித்திருக்கும் டி.டி.வி.தினகரன் வாய்க்கு வந்தபடி உளறி வருகிறார். டி.டி.வி.தினகரன் போடும் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் 200 வண்டிவீதம் மொத்தம் 6,400 வண்டிகள் மூலம் ஆட்களுக்கு ரூ.500 சம்பளம் கொடுத்து 50 ஆயிரம் ஆட்களை கூட்டி கூட்டம் நடத்துகிறார். இது ஒரு சாதனையா, டி.டி.வி.தினகரன் தன்னை ஒரு உத்தமன் போல் பேசி வருகிறார். ஒரு வருடம் சிறையில் இருந்தவர் தான் இந்த தினகரன். அது மட்டுமல்லாது அந்நிய செலாவணி வழக்கில் இவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு ரூ.28 கோடி அபராதம் விதிக்கப்பட்டுஉள்ளது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி பெயிலில் தான் உள்ளார்.

ஆர்.கே.நகர் டோக்கன் முறைபோல் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று கொக்கரிக்கிறார். ஆர்.கே.நகர் போன்று, திருப்பரங்குன்றம் கிடையாது. திருப்பரங்குன்றம் அ.தி.மு.க.வின் கோட்டையாகும், அதனால் தான் 9 முறை அ.தி.மு.க. இங்கு வென்றுள்ளது. இங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் கூட 43 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றுள்ளார். தற்போது மின்சாரத்தை பற்றி ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் பேசி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடி மின் பயனீட்டாளர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் கூட பயன்பெறுகின்றனர்.

வளர்ச்சியில் இன்று தமிழகம் இந்தியாவிலேயே 2–வது இடத்தில் உள்ளது. தற்போது 17 துறைகளில் இந்தியாவிலேயே முதன்மை துறையாக தமிழகம் உள்ளது. விரைவில் தமிழகம் முதலிடத்தை பிடிக்கும். ஏனென்றால் 15–வது திட்டக்குழு தலைவர் டாக்டர் என்.கே.சிங் சமீபத்தில் தமிழகம் வந்த போது தமிழகத்தில் தான் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாக சான்றிதழ் அளித்து தமிழகம் அனைத்திலும் முதன்மையாக உள்ளது என்று பாராட்டி சென்றார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்