கோர்ட்டை அவமதிக்கும் வகையில் பேசி உள்ள எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் - வேல்முருகன் பேட்டி
கோர்ட்டை அவமதிக்கும் வகையில் பேசி உள்ள எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என ஈரோட்டில் வேல்முருகன் கூறியுள்ளார்.
ஈரோடு,
தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி நீரோடை அமைப்பின் சார்பில் கூடல் விழா நேற்று ஈரோடு பெரியார் மன்றத்தில் நடந்தது. விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு, ‘தமிழக உரிமை போராட்டங்களில் பெரியாரின் பெரும்பணி’ என்ற தலைப்பில் பேசினார்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–
ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு இணங்க தமிழக கவர்னர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் எவ்வித லாப, நஷ்ட கணக்கு பார்க்காமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கோர்ட்டையும், போலீஸ் துறையையும் அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்க தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக் வேண்டும். சிறைச்சாலைகளில் செல்போனுக்கு தடை விதிப்பதோடு மட்டும் அல்லாமல், அனைத்து குற்றவாளிகளையும் சமமாக நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.