உடல் உறுப்பு தானம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று காலை நடைபெற்றது.

Update: 2018-09-16 23:00 GMT
சென்னை,

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- இறந்தவர்களின் உடல் உறுப்புகளைக் கொண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலத்திற்கான தேசிய விருதினை தொடர்ந்து 3 ஆண்டுகள் தமிழ்நாடு பெற்றுள்ளது.  தமிழகத்தில் இதுவரை 6 ஆயிரத்து 708 உறுப்புகள் 1,171 கொடையாளர்களிடமிருந்து தானமாக பெறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் ரூ.35 லட்சம் வரை உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தமிழக அரசு பயனாளிகளுக்கு வழங்குகிறது. இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகமான தொகையாகும்.

விமான அவசரகால ஊர்தி சேவை திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலம் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்தியாவிலேயே முன் மாதிரியான மாநிலமாக தொடர்ந்து விளங்கும். உடல் உறுப்பு தானத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாரத்தான் போட்டியில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்