மும்பையில் காணாமல் போன தனியார் வங்கி நிர்வாகி படுகொலை

மும்பையில் காணாமல் போன பிரபல தனியார் வங்கியின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.

Update: 2018-09-09 23:39 GMT
மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் வங்கியின் நிர்வாகி சித்தார்த் சாங்வி. மலபார்ஹில்லில் வசித்து வந்த இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் மகன் இருக்கிறான். இந்தநிலையில் கடந்த புதன்கிழமை அன்று பரேல் கமலா மில் பகுதியில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த அவரது மனைவி என்.எம்.மார்க் ஜோஷி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், நவிமும்பை கோபர்கைர்னேயில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே சித்தார்த் சாங்வியின் கார் கண்டுபிடித்து மீட்கப்பட்டது.

காரின் பின் இருக்கையில் கத்தி ஒன்று கிடந்தது. மேலும் ரத்தக்கறையும் இருந்தது. போலீசார் அந்த கத்தியை கைப்பற்றினர். மேலும் காரில் இருந்த ரத்தக்கறை மாதிரி சேகரிக்கப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சித்தார்த் சாங்வி காணாமல் போன நிலையில், அவரது கார் கத்தி மற்றும் ரத்தக்கறையுடன் மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரை கண்டுபிடிப்பதற்காக மும்பையில் உள்ள அவரது வங்கி அலுவலகம் முதல் கோபர்கைர்னே பகுதி வரையில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், காணாமல் போன சித்தார்த் சாங்வி கூலிப்படை மூலம் கடத்தி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் நேற்று தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் 20 வயது வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக சித்தார்த் சாங்வியை கடத்தி கொன்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும் கொலையான சித்தார்த் சாங்வியின் உடல் மீட்கப்படவில்லை.

அவரது உடலை கண்டுபிடிக்க கைதானவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சித்தார்த் சாங்வி கொலையில் தொடர்புடையதாக 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் வங்கி அதிகாரி கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்