பள்ளிக்கல்வித்துறை மூலம் கேரளாவுக்கு ரூ.1.62 கோடியில் நிவாரண பொருட்கள் அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்
பள்ளிக்கல்வித்துறை மூலம் கேரளாவுக்கு ரூ.1.62 கோடியில் நிவாரண பொருட்களை நெல்லையில் இருந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்.
நெல்லை,
பள்ளிக்கல்வித்துறை மூலம் கேரளாவுக்கு ரூ.1.62 கோடியில் நிவாரண பொருட்களை நெல்லையில் இருந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அனுப்பி வைத்தார்.
நிவாரண பொருட்கள்
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிக்கல்வி துறை மூலம் கேரளா மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரண பொருட்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு 22 லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 62 லட்சத்து 64 ஆயிரம் ஆகும்.
இந்த நிவாரண பொருட்கள் நேற்று காலை கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பச்சைக்கொடி அசைத்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார்.
ரூ.4 கோடி மதிப்பில்...
அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு துறை சார்பிலும், கேரள மாநிலத்திற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
பள்ளிக்கல்வி துறை மூலம் ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக ரூ.2 கோடியே 60 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 2–ம் கட்டமாக இங்கு 10 மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.4 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கூடத்தில் ஆய்வு
பின்னர் அவர் நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா.இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அந்த பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் எப்படி இருக்கிறது? கல்வி தரம், பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகளை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
அமைச்சர்– எம்.பி.க்கள்
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி.க்கள் எஸ்.முத்துக்கருப்பன்,. கே..ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்யானந்த், வசந்தி முருகேசன், எம்.எல்.ஏ.க்கள் முருகையா பாண்டியன், இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேச ராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், புதுக்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.