கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டும்போதே இடிந்து விழுந்த யோகா மைய கட்டிடம்

கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டும்போதே யோகா சிகிச்சை மையக்கட்டிடம் இடிந்து விழுந்தது. தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Update: 2018-09-04 22:00 GMT

திருமங்கலம்,

திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிலைய வளாகத்தில் ரூ.14 லட்சம் செலவில் யோகா சிகிச்சை மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கட்டிட பணி தற்போது, செங்கல் கட்டுமானத்திற்கு வந்துள்ளது. ஜன்னல் வைப்பதற்காக கான்கிரீட் மற்றும் செங்கல் சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் அங்கு பணியாளர்கள் கட்டிட பணியை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் காயமின்றி தப்பினர். கட்டும்போதே யோகா மைய கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, யோகா சிகிச்சை மைய கட்டிட பணிகள் ஆரம்பத்தில் இருந்தே தரமற்ற முறையில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கட்டிடம் தரமான முறையில் கட்டவில்லை. எனவே இனியாவது தரமான பொருட்களை கொண்டு கட்டிடம் கட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், நேற்று முன்தினம் இப்பகுதியில் பெய்த மழையால் கட்டிட வலு தன்மையை இழந்து இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அதனை உடனடியாக சரிசெய்தனர் என்றார்.

மேலும் செய்திகள்