நெல்லையில் இறந்த யானையின் உடல் மலைப்பகுதியில் அடக்கம்

நெல்லையில் உடல் நலக்குறைவால் இறந்த யானையின் உடல் மலைப்பகுதியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2018-09-04 21:30 GMT

நெல்லை,

நெல்லையில் உடல் நலக்குறைவால் இறந்த யானையின் உடல் மலைப்பகுதியில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

யானை சுந்தரி

நெல்லை மாவட்டம் பொட்டல்புதூரை சேர்ந்தவர் அசன் மைதீன். இவர் கடந்த 2011–ம் ஆண்டு முதல் சுந்தரி என்ற பெண் யானையை வளர்த்து வந்தார். கடந்த 2 வருடங்களாக யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் முதுமையின் காரணமாக கண் பார்வையை இழந்ததுடன், பற்களும் விழுந்து விட்டதால் யானை அவதிப்பட்டது.

இதையடுத்து அசன் மைதீன் கடந்த 23–ந் தேதி நெல்லை சந்திப்பு ஸ்ரீபுரத்தில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு யானையை அழைத்து வந்தார். அங்கு கால்நடைத்துறை டாக்டர்கள் குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த யானையை முதுமலை அல்லது ராஜபாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு சென்று பாதுகாக்க ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

பரிதாப சாவு

நேற்று முன்தினம் மாலையில் யானை சுந்தரி பரிதாபமாக இறந்தது. இதுபற்றி நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் வந்து பார்வையிட்டு யானைக்கான சான்றிதழ்களை சரிபார்த்து, யானை உடலை அடக்கம் செய்ய ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டி செல்லும் வழியில் உள்ள முத்தூர் மலைப்பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் யானையின் உடலை புதைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து யானை கிரேன் மூலம் லாரியில் ஏற்றி மலைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய குழி தோண்டப்பட்டது. நேற்று காலை மாவட்ட வனத்துறை அதிகாரி திருமால், கால்நடைத்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார், துணை இயக்குனர் அருணாசலமணி ஆகியோர் வந்தனர்.

அங்கு வைத்து கால்நடைத்துறை மற்றும் வனத்துறை டாக்டர்கள் குழுவினர் யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது யானை இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உள்ளது. வயது முதிர்ச்சியால் யானை இறந்து விட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

உடல் அடக்கம்

இதைத்தொடர்ந்து ராட்சத குழிக்குள் உப்பு மற்றும் சுண்ணாம்பு பொடி ஆகியவை கொட்டப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் யானையின் உடல் குழிக்குள் தள்ளப்பட்டது. பின்னர் யானைக்கு சந்தனம், குங்குமம் ஆகியவை பூசப்பட்டது. யானை உடலில் மாலைகளை போட்டு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் பால், சந்தனம், யானை விரும்பி சாப்பிடும் பொருட்கள் யானை மீது போடப்பட்டது. பின்னர் யானை உடல் மீது பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தள்ளி அடக்கம் செய்யப்பட்டது. அப்போது யானை உரிமையாளர் அசன் மைதீன், பாகன் ராஜேஷ் உள்ளிட்டோர் கதறி அழுதனர்.

யானை உடலுக்கு அ.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் அ.தி.மு.க.வினர், இயற்கை, வனவிலங்கு ஆர்வலர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்