ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தமிழக நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமிக்க வேண்டும் எர்ணாவூர் நாராயணன் பேச்சு
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தமிழக நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமிக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தமிழக நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமிக்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.
பொதுக்கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர், மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், அருண்சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
காமராஜருக்கு விழா
பெருந்தலைவர் காமராஜர் தனது 16 வயதில் சுதந்திரத்துக்காக பாடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். இது போன்று பலர் போராடி சுதந்திரத்தை பெற்றனர். காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது, இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டங்களை தீட்டினார். அணைகளை கட்டினார். அப்போது, மும்பைக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி பெற்று இருந்தது. பள்ளிகளை அதிக அளவில் திறந்து, இலவச மதிய உணவு திட்டத்தை அளித்து மக்களின் வேதனையை போக்கினார். காமராஜர் பிறக்கவில்லை என்றால், தமிழ்நாட்டில் கல்விச்சாலைகள் இல்லாமல், பீகார் போன்று சிறைச்சாலைகள்தான் இருந்திருக்கும். காமராஜர் இருந்த காங்கிரஸ் கட்சி அவருக்கு விழா எடுக்கவில்லை. ஆனால் சமத்துவ மக்கள் கழகம் தொடர்ந்து விழா எடுத்து வருகிறது.
ஊழல் புகார்
தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் உள்ளது. ஆனால் அவர் மீது முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல்ை-. உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதைவிட அதிக பாதுகாப்பு தற்போதைய முதல்-அமைச்சருக்கு வழங்கப்படுவது ஏன்?. தமிழகத்தில் வருமான வரி சோதனையில் ரூ.4 ஆயிரம் கோடி பறிமுதல் என்று கூறுகிறார்கள். ஆனால் இதனை பிரதமர் கண்டுகொள்ளாமல் மவுனம் காத்து வருகிறார்.
தமிழக நீதிபதி
தூத்துக்குடியில் உள்ள சாலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளது. ஆனால் பசுமைச்சாலை என்று திட்டம் தீட்டுகிறார்கள். இந்த பசுமை சாலை திட்டம் கமிஷனுக்காக நடக்கிறது. தூத்துக்குடியில் மக்கள் உயிர் போக காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய, தமிழக நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் சமத்துவ மக்கள் கழக தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ரவிசேகர், தென்மண்டல செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் காசிலிங்கம் நன்றி கூறினார்.