கிருஷ்ணர் கோவிலில் ரூ.44¾ லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த தம்பதி உள்பட 6 பேர் கைது

கிருஷ்ணர் கோவிலில் ரூ.44¾ லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-04 00:25 GMT
தானே,

தானே, ஜாம்பிலி நாக்கா பகுதியில் பழமையான கோவர்தன் நாத் நி ஹவேலி கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைக்கப்பட்டு இருந்த தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கொள்ளையடிக்கப்பட்டது. முதலில் கோவிலில் இருந்த ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் கோவில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்து அங்கு இருந்த ரூ.44¾ லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தி இருந்தனர். எனவே போலீசார் கோவில் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கோவில் அருகே பழைய பொருட்கள் கடை நடத்தி வரும் திவா சில்பாட்டா பகுதியை சேர்ந்த சந்தோஷ் காம்ளே (வயது26) மற்றும் அவரது மனைவி ரேகா(21) ஆகியோருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது அவர்கள் கோவில் கொள்ளையில் முக்கிய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் இந்த கொள்ளையில் தொடர்புடைய அருண்(19), சாஜாத் கான்(25), சம்ருதீன்(22), ஆசாத் சகா(19) ஆகியோரை கைது செய்தனர்.

போலீசாருக்கு தொடர்பா?

போலீசார் கும்பலிடம் இருந்து கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 150 ஆண்டு பழமையான நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையடித்துவிட்டு தப்பிஓட பயன்படுத்திய கார், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தானே துணை போலீஸ் கமிஷனர் சத்ய நாராயணன் கூறியதாவது:-

கைது செய்யப்பட்டவர்கள் இதற்கு முன் எங்கும் கொள்ளையில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கொள்ளை சம்பவம் நடந்த கோவிலின் மிக அருகில் போலீஸ் சாவடி உள்ளது. எனவே இந்த கொள்ளையில் போலீசாருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்