மகனை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
வடமதுரை அருகே மகனை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடமதுரை,
வடமதுரை அருகே உள்ள குருந்தம்பட்டியை சேர்ந்தவர் சின்னான் அம்பலம் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு கருப்பையா (9) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கருப்பையா 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை லட்சுமி தனது மகளுடன் ஒட்டன்சத்திரம் அருகே கூலிவேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் அங்கேயே தங்கியிருந்ததாக தெரிகிறது. இதற்கு சின்னான் அம்பலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் வேலையை விட்டு விட்டு மகளுடன் வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் லட்சுமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சின்னான் அம்பலம் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து விஷக்கிழங்கை மகனுக்கு கொடுத்துவிட்டு தானும் தின்றார். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் கருப்பையா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னான் அம்பலத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகனை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.