வாக்கு சீட்டுகள் மீது மை பாட்டில் வீசிய அ.தி.மு.க. நிர்வாகி கைது
வத்தலக்குண்டுவில் கூட்டுறவு சங்க தேர்தல் வாக்கு எண்ணும்போது வாக்குசீட்டுகள் மீது மை பாட்டில் வீசிய அ.தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார். பழனி அருகே தி.மு.க., அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு,
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டுவில் கூட்டுறவு நகர வங்கி உள்ளது. இந்த வங்கி நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த 1-ந்தேதி நடந்தது. இந்த வங்கியில் மொத்த வாக்குகள் 9 ஆயிரத்து 677 உள்ளன. அதில் 2 ஆயிரத்து 149 வாக்குகள் பதிவானது. இந்நிலையில் நேற்று காலையில் வாக்கு எண்ணும் பணி வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகம் அருகேயுள்ள சமுதாயக்கூடத்தில் வங்கி தேர்தல் அதிகாரி மனோகரன் முன்னிலையில் நடந்தது.
முதல் சுற்றில் தி.மு.க., அ.தி.மு.க. சமபலமாக இருந்தது. இரண்டாவது சுற்றில் தி.மு.க. முன்னிலை வகித்ததாக கூறப்படுகிறது. மூன்றாவது சுற்று எண்ணும் பணி நடந்தது. அப்போது விருவீடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், வத்தலக்குண்டு அ.தி.மு.க. இளைஞரணி ஒன்றிய செயலாளருமான ஜெயபாண்டி திடீரென்று தான் கொண்டு வந்திருந்த மை பாட்டிலை எடுத்து திறந்து வாக்கு சீட்டுகள் மீது வீசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. அ.தி.மு.க. நிர்வாகி ஜெயபாண்டியை வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் கைது செய்தார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன், நகர செயலாளர் சின்னத்துரை ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினரும், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், நகர செயலாளர் பாண்டியராதா ஆகியோர் தலைமையில் அந்த கட்சியினர் வெளியேற மறுத்தும், வாக்கு எண்ணிக்கையை தொடரும்படி கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க., அ.ம.மு.க. தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் முன்பாக சாலையோரத்தில் நின்று கோஷமிட்டனர்.
தகவலறிந்த மாவட்ட தேர்தல் அதிகாரி பாலசுப்பிரமணி, நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமரன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து தி.மு.க., அ.ம.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறுவாக்கு எண்ணிக்கை தேதியை ஒரு வார காலத்திற்குள் அறிவிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்
இதேபோல் பழனியை அடுத்த தும்பலப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க 11 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 1-ந்தேதி நடந்தது. இந்நிலையில் நேற்று தும்பலப்பட்டி சமுதாயக்கூடத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நாட்டுத்துரை உள்பட அ.தி.மு.க.வினர் தேர்தல் அதிகாரியான செல்வாராஜிடம் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் சிறிது நேரத்தில் மோதலாக மாறியது. அப்போது அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த அட்டையால் ஆன தடுப்பு சரிந்து நாட்டுத்துரை மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அ.தி.மு.க.வினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சம்பவத்துக்கு காரணமான தேர்தல் அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தி, இரவு 7 மணிக்கு தும்பலப்பட்டி-புதுதாராபுரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகளும் எந்த முடிவையும் அறிவிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினரும் புதுதாராபுரம் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்களும் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், கீரனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போலீசார், நாட்டுத்துரை படுகாயமடைந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அ.தி.மு.க.வினர் கலைந்து சென்றனர். ஆனால் தேர்தல் அதிகாரிகள் வரவேண்டும். இல்லையென்றால் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ. சக்கரபாணி இங்கு வந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கூறி தி.மு.க.வினர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.