தூக்கில் பிணமாக தொங்கிய பெண் கொலையா? போலீசார் விசாரணை

நெல்லிக்குப்பம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-09-03 22:00 GMT
நெல்லிக்குப்பம், 


நெல்லிக்குப்பம் அருகே கொங்கராயனூரை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 28). கார் டிரைவர். அழகிய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கவிப்பிரியா (24). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் சுபியன் என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரக்குமார், காரில் சவாரிக்காக வெளியூர் புறப்பட்டார். இதனால் வீட்டில் கவிப்பிரியா தனியாக இருந்தார். இந்த நிலையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் வீரக்குமாருக்கும், கவிப்பிரியாவின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் வீரக்குமாரும், கவிப்பிரியாவின் பெற்றோர், உறவினர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கவிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி கவிப்பிரியாவின் தந்தை கலியபெருமாள், போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளில் கவிப்பிரியா இறந்ததால் அவரது சாவு குறித்து கடலூர் சப்-கலெக்டர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்