தாறுமாறாக ஓடிய கார் மோதி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் பலி பஸ்சுக்காக காத்திருந்த போது பரிதாபம்

திருச்சி அருகே பஸ்சுக்காக காத்திருந்த கட்டிட தொழிலாளர்கள் மீது தாறுமாறாக ஓடிய கார் மோதியது. இதில் பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

Update: 2018-09-03 23:00 GMT
ஜீயபுரம்,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பாப்பக்காபட்டியை சேர்ந்தவர் வடிவேல்(வயது40). கட்டிட மேஸ்திரி. இவரது தலைமையில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் சித்தாள் வேலை செய்யும் பெண்கள் திருச்சி அருகே உள்ள சிறுகமணி அக்ரஹாரம் பகுதியில் ஒரு வீட்டின் கட்டிட வேலைக்காக தினமும் வந்து சென்றனர்.

மாலையில் வேலை முடிந்ததும் சிறுகமணி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி பெட்டவாய்த்தலையில் இறங்கி, அங்கிருந்து மற்றொரு பஸ் மூலம் ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். நேற்று காலை வழக்கம்போல சிறுகமணி அக்ரஹாரம் பகுதியில் வீட்டின் கட்டுமான பணிக்காக மேஸ்திரி வடிவேல் தலைமையில் வந்தனர்.

மாலையில் வேலைமுடிந்து 6.30 மணிக்கு சிறுகமணி பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். அங்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக அனைவரும் காத்திருந்தனர். அப்போது கரூரில் இருந்து திருச்சி நோக்கி தாறுமாறாக கார் ஒன்று வந்தது. அந்த கார் அரசின் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானதாகும். காரை பொதுப்பணித்துறை அரியார் சப்-டிவிசன் உதவி பொறியாளர் தயாளகுமார் என்பவர் ஓட்டி வந்தார்.

சாலையில் தாறுமாறாக ஓடிய கார், கட்டுப்பாட்டை இழந்து சிறுகமணி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த கட்டிட தொழிலாளர்கள் கூட்டத்தில் புகுந்து மோதியது. கார் மோதிய வேகத்தில் சிக்கிய கட்டிட தொழிலாளர்கள் அருகில் உள்ள வயல் மற்றும் வாய்க்கால் கரைகளில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தை நேரில் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடோடி வந்தனர். அங்கு தூக்கி வீசப்பட்ட நபர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் கட்டிட மேஸ்திரி வடிவேல் மற்றும் சித்தாள் பணிக்கு சென்ற குளித்தலை அருகே உள்ள நடைபாலம் பொய்யாமணியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சித்ரா(30), ஆறுமுகம் மனைவி கோமதி(40) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டிட தொழிலாளர்கள் பாப்பாத்தி(30), கோமதியின் மாமியார் ரங்கநாயகி(55) ஆகியோர் காயத்துடன் உயிர்தப்பினர்.

தகவல் அறிந்ததும் பெட்டவாய்த்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி,துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்ரமணியன் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தனர். அங்கு விபத்தில் பலியான 3 பேர் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாலை வேளையில் நடந்த விபத்து காரணமாக திருச்சி-கரூர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

காரை ஓட்டிவந்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தயாளகுமாரை, பெட்டவாய்த்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்