ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் துப்பாஸ்பட்டி கிராம மக்கள் கோரிக்கை
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று துப்பாஸ்பட்டி கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கீழ அரசடி பஞ்சாயத்து துப்பாஸ்பட்டி கிராம மக்கள் சுமார் 35-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலையில் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த மனுவில் கூறி இருப்பதாவது;-
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் எதிர்பாராத விதமாக சிலரது பொய் பிரசாரம் மூலமும், கேன்சர் மற்றும் பல நோய்களை இந்த ஆலை பரப்புகிறது என்று மக்களிடம் மூளைச்சலவை செய்தும், ஆலையை தற்காலிகமாக மூடி நாட்டின் அமைதியை சீர்குலைத்து விட்டனர்.
இந்த ஆலை கடந்த 22 ஆண்டுகளாக நேரடியாகவும், மறைமுகமாகவும் எங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வந்தது. தற்போது ஆலை மூடப்பட்டதால் எங்கள் கிராம மக்கள் பலர் வேலைகளை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே எங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரம் கருதி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை உடனே திறக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து இருந்தனர்.