பூண்டி லிங்க் கால்வாயில் புதிய மதகுகள் அமைக்கும் பணி தொடங்கியது

பூண்டியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் லிங்க் கால்வாயில் சேதமடைந்த மதகுகளுக்கு பதிலாக புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

Update: 2018-09-03 22:45 GMT
சென்னை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தப்படி ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து, தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வாட்டி எடுத்த கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதே காரணத்தால் கண்டலேறு அணையிலும் நீர் மட்டம் குறைந்ததால் பூண்டிக்கு தண்ணீர் திறப்பு மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டதால் தற்போது பூண்டி ஏரி வறண்டு காணப்படுகிறது.

இதற்கிடையே பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட புல்லரம்பாக்கத்தில் 4 மதகுகள் உள்ளன. இவை பழுதடைந்ததால் கடந்த காலங்களில் லிங்க் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் போதெல்லாம் சிரமம் ஏற்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு சேதம் அடைந்த மதகுகளை மாற்றி, புதிய மதகுகள் அமைக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பேரில் அரசு ஒதுக்கிய நிதியில் இருந்து புதியதாக மதகுகள் அமைக்கும் பணிகள் நேற்று தொடங்கியது. 2 மீட்டர் அகலம், 2 மீட்டர் உயரம் கொண்ட 4 மதகுகள் புதியதாக அமைக்கப்பட உள்ளது.

இதற்காக நேற்று காலை உதவிப்பொறியாளர் ரமேஷ் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தி மதகுகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த மதகுகள் வழியாக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீரை லிங்க் கால்வாயில் திறந்து விடமுடியும் என்று பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் ரமேஷ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்