கால்வாயை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
கண்ணமங்கலம் அருகே கால்வாயை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் ஊராட்சி காங்கிரானந்தல் அருந்ததியர் காலனி பகுதியில் புதிதாக நெடுஞ்சாலைத்துறை மூலமாக கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை மூடியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் படவேடு செல்லும் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சந்தவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.