கனரக வாகனங்கள் செல்வதால் குமுளி மலைப்பாதை சேதமடைய வாய்ப்பு

குமுளி மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்வதால் பாதைகள் சேதமடைய வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-09-02 22:00 GMT
கூடலூர், 

தமிழக-கேரள மாநிலங்களை இணைக்கும் எல்லைப்பகுதியாக குமுளி உள்ளது. குமுளிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தேனி-கொல்லம் நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப்பிலிருந்து 6 கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைப்பாதையில் செல்கிறது. இந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. கடந்த மாத தொடக்கத்தில் இப்பகுதியில் காற்றுடன் பெய்த கன மழையால் இரைச்சல் பாலம் மேல் வளைவில் மண் சரிவின் காரணமாக ரோடு துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த மலைப்பாதையில் பல இடங்களில் மரம், மண், பாறைகள் உருண்டு விழுந்து ரோட்டை முழுமையாக அடைத்துக்கொண்டது. இதனால் இப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, குமுளி மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள் கம்பம்மெட்டு வழியாக திருப்பி விடப்பட்டது.

பின்னர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் பாறை துகள் கொண்ட மூட்டைகளால் தற்காலிகமாக பாதை பலப்படுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 26-ந்தேதி முதல் கனரக வாகனங்கள் தவிர அனைத்து வாகனங்களும் குமுளி மலைப்பாதை வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால் போலீசாரின் அனுமதியோடு இரவு நேரங்களில் இவ்வழியாக கேரளாவுக்கு சிமெண்டு பாரம் ஏற்றிக் கொண்டு லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்கிறது. ஏற்கனேவே தற்காலிகமாக பலப்படுத்தப்பட்டுள்ள பாதையில் அதிக பாரத்துடன் செல்லும் இந்த வாகனங்களால் பாதை மீண்டும் சேதமடைந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அனுமதி மறுக்கப்பட்ட கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்லாமல் இருக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்