வங்கியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.50 கோடி மோசடி செய்ய முயன்ற 2 பேர் கைது
வங்கியில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.50 கோடி மோசடி செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
வங்கியில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.50 கோடி மோசடி செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.50 கோடி
மும்பை கோரேகாவ் பகுதியை சேர்ந்தவர் அருண் கோயல் (வயது55). இவர் அங்குள்ள தனியார் வங்கியில் புதிதாக வங்கி கணக்கு தொடங்கினார். பின்னர் சில நாட்கள் கழித்து வங்கி மேலாளரை சந்தித்து அவர் ஆந்திர வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட பவர் ஆப் ஆட்டர்னி சான்றிதழை வழங்கினார். இதில் அருண் கோயலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிரந்தர வைப்புத்தொகையை அவரது பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை கண்ட வங்கி மேலாளர் சில நாட்கள் கழித்து பணத்தை பெற்று கொள்ளும்படி தெரிவித்து அனுப்பி வைத்தார். மேலும் பவர் ஆப் ஆட்டர்னியை அனுப்பிய ஆந்திர மாநில வங்கிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார். இதில் வங்கி சார்பாக தாங்கள் எதுவும் சான்றிதழ் அனுப்பவில்லை என மறுப்பு தெரிவித்தனர்.
2 பேர் கைது
இதையடுத்து வங்கி மேலாளர் நடத்திய விசாரணையில் போலியான பவர் ஆப் ஆட்டர்னியை கொடுத்து ரூ.50 கோடி மோசடி நடத்த முயன்றது தெரியவந்தது. இதனால் வங்கி மேலாளர் கோரேகாவ் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் கோயலை தொடர்பு கொண்டு வங்கிக்கு வந்து பணத்தை பெற்று செல்லும்படி அழைப்பு விடுத்தனர்.
இதனை நம்பிய அருண் கோயல் மற்றும் அவரது கூட்டாளி பாலசுப்பிரமணியம் ஆகிய 2 பேர் பணம் பெற்று செல்ல வங்கிக்கு வந்தனர். அப்போது மறைந்து இருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். ேமலும் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.