டி.வி. கேபிள் வயர் சிக்கி மோனோ ரெயில் சேவை திடீர் பாதிப்பு இயங்க தொடங்கிய 2-வது நாளில் சம்பவம்

செம்பூரில் டி.வி. கேபிள் வயர் சிக்கியதன் காரணமாக மோனோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

Update: 2018-09-03 00:15 GMT
மும்பை, 

செம்பூரில் டி.வி. கேபிள் வயர் சிக்கியதன் காரணமாக மோனோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

மோனோ ரெயில்

நாட்டிலேயே முதன்முறையாக மும்பையில் தான் மோனோ ரெயில்செவை திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த மோனோ ரெயில் ேசவை போதிய வரவேற்பின்மை காரணமாக நஷ்டத்தில் இயங்கியது. கடந்த ஆண்டு நவம்பரில் மோனோ ரெயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தை தொடர்ந்து, அதன் சேவை அடியோடு முடங்கியது.

இந்த நிலையில், 10 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மோனோ ரெயில் தனது வழித்தடத்தில் மீண்டும் பயணிக்க தொடங்கியது. இந்த நிலையில், இரண்டாவது நாளான நேற்று திடீரென மோனோ ரெயில் இயக்கத்தில் பாதிப்பு உண்டானது.

கேபிள் வயர்

செம்பூர் - வி.என்.புரவ் மார்க் மோனோ ரெயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் டி.வி. கேபிள் வயர் திடீரென அங்குள்ள மோனோ ரெயில் வழித்தடத்தின் மேலே விழுந்து விட்டது.

அந்த நேரத்தில் அந்த வழியாக வந்து கொண்டிருந்த மோனோ ரெயிலில் அந்த கேபிள் வயர் சிக்கி கொண்டது. இதன் காரணமாக அந்த மோனோ ரெயில் நடுவழியில் நின்றது.

திடீரென மோனோ ரெயில் நடுவழியில் நின்றதால் அதில் இருந்த பயணிகள் அனைவரும் பதற்றம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக மோனோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

தீயணைப்பு படையினர் அகற்றினர்

கேபிள் வயர் மோனோ ரெயிலில் சிக்கிக்கொண்டது பற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராட்சத கிரேனில் நின்றபடி மோனோ ரெயிலில் சிக்கியிருந்த கேபிள் வயரை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதன்பின்னர் அந்த மோனோ ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதன்பின்னர் மோனோ ரெயில் சேவை சீரானது.

மோனோ ரெயில் வழித்தடத்தில் டி.வி. கேபிள் வயர் விழுந்து மோனோ ரெயிலில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்