கடையக்குடி பிரசன்ன ரெகுநாதப்பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கடையக்குடியில் உள்ள பிரசன்ன ரெகுநாதப்பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-09-02 22:30 GMT
அரிமளம்,

அரிமளம் அருகே உள்ள கடையக்குடி ஊர் பொதுமக்கள், யாதவ சமூகத்தினர், பிரசன்ன ரெகுநாத கைங்கர்ய சங்கம் மற்றும் பாரத முன்னேற்ற கழகம் சார்பில் 11-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கடையக்குடியில் உள்ள பிரசன்ன ரெகுநாதப்பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் பெண்களுக்கான கோலப்போட்டிகள் நடைபெற்றது. பின்னர் மதியம் 12 மணியளவில் உச்சலம் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பிரசன்ன ரெகுநாதப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபா ராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு தையல் எந்திரம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து, அம்மா பேரவை செயலாளர் திலகர், பாரத முன்னேற்ற கழக மாநில துணை தலைவர் ஆறு கோனார் உள்பட கடையக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. தொடர்ந்து கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்