உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது மைசூரு, மண்டியாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடப்பதையொட்டி மைசூரு, மண்டியாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மைசூரு,
உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடப்பதையொட்டி மைசூரு, மண்டியாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மைசூரு மாநகராட்சி
மைசூரு மாநகராட்சிக்கு கடந்த 31-ந்தேதி தேர்தல் நடந்தது. 65 வார்டுகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மைசூரு படுவாரஹள்ளி மகாராணி கல்லூரியின் புதிய கட்டிடத்தில் உள்ள 5 அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (திங்கட் கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. 65 வார்டுகளுக்கான ஓட்டுகள் 65 மேஜைகளில் எண்ணப்படுகிறது. ஒரு மேஜையில் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகள் வீதம் ஒவ்வொரு சுற்றும் எண்ணப்படுகிறது. இதற்காக மகாராணி கல்லூரியில் மேஜைகள், இருக்கைகள் போடப்பட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் தவிர வெளியாட்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் அங்கு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
144 தடை உத்தரவு
ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு மகாராணி கல்லூரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மைசூரு மாநகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கல்லூரியை சுற்றியுள்ள சாலைகளில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மதியம் ஒரு மணிக்குள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மண்டியா மாவட்டம்
இதேப் போல் கடந்த 31-ந்தேதி மண்டியா மாவட்டத்தில் உள்ள மண்டியா நகரசபை, மத்தூர், நாகமங்களா, பாண்டவபுரா ஆகிய புரசபைகளுக்கும், பெல்லூர் பட்டண பஞ்சாயத்துக்கும் தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் 68.10 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் மண்டியா நகரசபை உட்பட்ட பகுதிகளில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மண்டியா அரசு ஆண்கள் கல்லூரியிலும், மத்தூர் புரசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மத்தூர் எச்.கே.வீரண்ணா கவுடா கல்லூரியிலும், பாண்டவபுரா புரசபையில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பாண்டவபுரா அரசு கல்லூரியிலும், பெல்லூரில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு எந்திரங்கள் பெல்லூர் அரசு பள்ளியிலும் வைக்கப்பட்டுள்ளன.
இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 52 மேஜைகளில் இந்த ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டு எண்ணும் பணியில் 65 அலுவலர்கள் உள்பட 455 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். இதையொட்டி 4 துணை போலீஸ் சூப்பிரண்டு, 14 இன்ஸ்பெக்டர்கள், 27 சப்-இன்ஸ்பெக்டர்கள், 63 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 500 ஏட்டுகள், போலீஸ்காரர்கள், 300 ஊர்க்காவல் படையினர், மாவட்ட ஆயுதப்படை போலீசார் என சுமார் 1,500 போலீசார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.