நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று பாடுபட வேண்டும் என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Update: 2018-09-02 23:00 GMT

வால்பாறை,

வால்பாறையில் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் பணிகள், வளர்ச்சி பணிகள் குறித்த செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். வால்பாறை நகர செயலாளர் மயில்கணேசன் வரவேற்றார். கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:–

மறைந்த முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதா எனக்கு பிறகும் இந்த கட்சி 100 ஆண்டுகள் மக்களுக்காக பாடுபடும் என்று கூறினார். தொண்டாகளை நம்பிதான் அவர் அப்படி கூறிஉள்ளார். அ.தி.மு.க.வினர் மக்களோடு மக்களாக ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும். வால்பாறை சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் மலைப்பகுதியில் உள்ளதால் அதிக முக்கியத்துவம் கொடுத்து தொகுதி எம்.எல்.ஏ., நிர்வாகிகளுடன் இணைந்து எஸ்டேட், எஸ்ட்டாக சென்று மக்களை சந்திக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு குடும்பம் கூட தமிழ்நாட்டில் வாழ முடியாது. அ.தி.மு.க. வந்தால் மட்டுமே ஏழைகளுக்காக உழைக்கும். எனவே ஒற்றுமையாக இருந்து செய்த திட்டங்களை கூறி மக்களிடம் ஓட்டு கேட்க வேண்டும். நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி பாராளுமன்றதேர்தல் பணியாற்றி நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–

வால்பாறை பகுதியில் நடைபெறும் ஒவ்வொரு அ.தி.மு.க. கூட்டமும் மாநாடு போல்தான் நடக்கிறது. ஏழை மக்களுக்காக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய இந்த கட்சியின் முக்கியத்துவமே உழைப்புதான். எனவே ஸ்டாலின் மற்றும் தினகரனால் அ.தி.மு.க.வை நெருங்கக் கூடமுடியது. கருணாநிதியின் மகன் என்ற முறையில் கட்சிக்கு தலைவராகி உள்ள ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோதும், துணை முதல்– அமைச்சராக இருந்தபோதும் தமிழக மக்களுக்கு என்ன செய்துள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் தி.மு.க.வை விட 10 மடங்கு திட்டங்கள் செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்து மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை நாம்தான் நிர்ணயம் செய்யப்போகிறோம். வால்பாறை பகுதியை பொறுத்த வரை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு தான் தேயிலை தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு, எஸ்டேட் பகுதி சாலைகள் சீரமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் டேன்டீ எஸ்டேட் சாலை உள்பட பழுதடைந்த நிலையில் உள்ள அனைத்து எஸ்டேட் சாலைகளையும் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

வால்பாறையில் ஆற்றின் ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு எஸ்டேட் இடத்தை கையகப்படுத்தி அடுக்குமாடி வீடுகள் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை நடைபெறுகிறது. பின்னர் இதுபற்றி முதல்– அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதேபோல் உள்ளாட்சி துறை மூலமாகவே பல்வேறு எஸ்டேட் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதிகாரிகள் தேர்வு செய்யும் இடங்களில் ஒரு மாதத்தில் தாவரவியல் பூங்காவும், படகு இல்லமும் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

டேன்டீ நிர்வாகத்தை தனியாருக்கு விடுவதற்கு விடமாட்டோம். ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களில் விடுபட்டவர்களுக்கு உடனடியாக பணிக்கொடை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கி உள்ளோம். வால்பாறை பகுதி மக்களின் அனைத்து வளர்ச்சிகளிலும் இணைந்துள்ள அ.தி.மு.க.வின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்.

கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டி அமைத்து, திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். அதிகப்படியான வாக்குகள் கிடைக்க வால்பாறை சட்டமன்ற தொகுதி மக்கள் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்– அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மக்களுக்காக நாம் கேட்கும் திட்டங்களை செய்து கொடுக்க தயாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்