ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேர் மீது வழக்கு
விழுப்புரம் அருகே ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேர் மீது வழக்கு செய்யபட்டனார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இருந்த 2 ஆளில்லாத ரெயில்வே கேட்டுகளை கடந்த ஓராண்டுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகத்தினர் மூடிவிட்டனர். இதில் ஒரு ரெயில்வே கேட்டின் கீழ் பகுதியில் பள்ளம் தோண்டி கடந்த 6 மாத காலமாக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் காரணமாக கொத்தமங்கலம், வெண்மணியாத்தூர், கப்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ– மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமங்களுக்கு இடையே கோனூருக்கும், விழுப்புரத்துக்கும் சென்று வருகின்றனர். கொத்தமங்கலம் ரெயில்வே கேட் வழியாக வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பெரும்பாலான மாணவ– மாணவிகள் சுரங்கப்பாதை வழியாக மண் பாதையில் வெகு தொலைவு கால்கடுக்க நடந்தே கோனூரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பெய்த பலத்த மழையால் சுரங்கப்பாதை யில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதன் காரணமாக இந்த வழியாக மாணவ– மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 3 கிராம மக்கள் ஒருங்கிணைந்து கடந்த 29–ந்தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேர் மீது விழுப்புரம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.