பர்கூர் மலைப்பகுதியில் தோட்டத்து மின்வேலியில் சிக்கி ஆண் யானை சாவு

பர்கூர் மலைப்பகுதியில் தோட்டத்து மின்வேலியில் சிக்கிய ஆண் யானை இறந்தது.

Update: 2018-09-02 22:15 GMT

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானை, மான், சிறுத்தை, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் மட்டும் உணவு மற்றும் தண்ணீரைத்தேடி அடிக்கடி வனப்பகுதியைவிடடு வெளியேறி கிராமப்பகுதிக்குள் புகுந்துவிடுகிறது. குறிப்பாக வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனை விவசாயிகள் தங்களுடைய தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காக்க ‘பேட்டரி’ மூலம் மின்வேலி அமைத்து உள்ளனர்.

அதன்படி அத்தாணி கரும்பாறை பகுதியை சேர்ந்த கோதண்டராமன் (வயது 55) என்பவர் தன்னுடைய விவசாய நிலத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்புகளை சாகுபடி செய்து உள்ளார். மேலும் கரும்புகளை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக ‘பேட்டரி’ மூலம் மின்வேலி அமைத்து உள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை ஒன்று கோதண்டராமனின் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த யானை மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தது. நேற்றுக்காலை அந்த வழியாக வந்த விவசாயிகள் யானை மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இதுகுறித்து அந்தியூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி விஸ்வநாதன், அந்தியூர் வனச்சரகர் பாலகிருஷ்ணன், வனப்பாதுகாவலர் ராமச்சந்திரன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் யானையின் உடலை பார்வையிட்டனர்.

மேலும் கால்நடை டாக்டர் அசோகன் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, இறந்து கிடந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அப்போது யானை மின்வேலியில் சிக்கி இறந்ததும், 30 வயதுடைய ஆண் யானை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த யானையின் உடல் பர்கூர் வனப்பகுதியில் மற்ற வனவிலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்