அந்தியூர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த ஓட்டல் தொழிலாளி, போலீஸ் விசாரணை

அந்தியூர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஓட்டல் தொழிலாளி இறந்து கிடந்தார். கொலையா? தற்கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-02 22:45 GMT

அந்தியூர்,

ஊட்டி லவ்டேல் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 36). திருமணம் ஆகாதவர். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பவானி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் அவர் மற்ற தொழிலாளர்களுடன் ஓட்டலின் அருகே உள்ள ஒரு விடுதியில் வாடகைக்கு தங்கியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் விடுதியில் இருந்தபோது சேகர் இரவு ஊட்டியில் உள்ள வீடுடுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து மற்ற தொழிலாளர்கள் ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். பின்னர் நேற்று காலை தொழிலாளர்கள் அனைவரும் அந்த விடுதிக்கு சென்றனர்.

அப்போது ஒரு அறையில் சேகர் 3 அடி உயரம் கொண்ட ஜன்னல் கம்பியில் வேட்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக இதுகுறித்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து தூக்கில் தொங்கிய சேகரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்