திருப்பதியில் கட்டிட வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி கணவரின் உயிரை பறித்து விட்டனர்:மனைவி கண்ணீர்
ஏஜெண்டுகள் திருப்பதியில் கட்டிட வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, கணவரின் உயிரை பறித்து விட்டதாக, ஸ்ரீகாளஹஸ்தி அருகே வனப்பகுதியில் ஆந்திர போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான காமராஜின் மனைவி கண்ணீர் மல்க கூறினார்.
ஜமுனாமரத்தூர்,
ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் கொல்லப்பள்ளி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு செம்மரக்கடத்தல் கும்பல் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள கானாமலை கிராம பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி காமராஜ் (வயது 53) என்பவர் முதுகு பகுதியில் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்தத் தகவல் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள டி.வி.சேனல்களில் ஒளிபரப்பானது. டி.வி.களில் இந்த தகவலைக் கேட்ட, அவருடைய மனைவி காமாட்சி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காமராஜ் பலியான சம்பவத்தை ஆந்திர மாநில போலீசார், ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு தெரிவித்தனர். ஜமுனாமரத்தூர் போலீசார், காமராஜின் வீட்டுக்குச் சென்று அவருடைய மனைவிக்கு விவரங்களை தெரிவிக்க புறப்பட்டனர்.
ஆனால் முன்கூட்டியே தகவல் அறிந்த காமராஜின் மனைவி காமாட்சி மற்றும் உறவினர்கள் உடனடியாக வீட்டில் இருந்து புறப்பட்டு திருப்பதிக்குச் செல்ல வந்து கொண்டிருந்தனர். நடுவழியில் அவர்களை சந்தித்த போலீசார், காமாட்சியிடம் காமராஜ் துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவத்தைக் கூறி விசாரணை நடத்தினர்.
அப்போது காமராஜின் மனைவி காமாட்சி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். காமாட்சி கூறுகையில், எனது கணவரை ஏஜெண்டுகள் திருப்பதியில் கட்டிட வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறினர். கட்டிட வேலைக்குத் தான் செல்கிறார் என நாங்களும் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டோம். ஆனால் டி.வி.களில் தகவலை கேட்டபோது தான் கணவர் ஸ்ரீகாளஹஸ்தி அருகே வனப்பகுதியில் ஆந்திர போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி விட்டார் எனத் தெரிய வந்தது. நாங்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் துடித்துப் போய்விட்டோம். கட்டிட வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி கணவரின் உயிரை பறித்து விட்டனர். எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றார்.