வண்டலூர் பூங்கா அருகே கழிவுநீரால் சாலை சேதம் தனியார் பல்கலைக்கழகம் மீது போலீசார் வழக்கு
வண்டலூரில் தனியார் பல்கலைக்கழகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வண்டலூர்,
வண்டலூர் பூங்கா அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கிரசன்ட் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிரசன்ட் பல்லைக்கழகத்தில் இருந்து தினமும் இரவு நேரங்களில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கழிவுநீர் சாலையில் தேங்குவதால் வண்டலூர் பூங்கா அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100 மீட்டர் சாலை குண்டும் குழியுமாக மாறி சேதம் அடைந்து உள்ளதால் அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் சுவிக் சந்திரன் நேற்று ஓட்டேரி போலீசில் கிரசன்ட் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். இதன் பேரில் ஓட்டேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுமாறன் வண்டலூரில் உள்ள கிரசன்ட் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.