சத்துவாச்சாரி பகுதியில் ஒரே நாளில் 6 மோட்டார்சைக்கிள் திருடிய 3 பேர் கைது

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தபட்டிருந்த 6 மோட்டார்சைக்கிளை ஒரே நாளில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-09-01 23:37 GMT
வேலூர்,

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் ஒரே நாளில் சத்துவாச்சாரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தென்றல் நகர் மற்றும் பேஸ்-2 பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், ரவி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பிள்ளையார்குப்பம் சாலை சந்திப்பில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சங்கரன்பாளையத்தை சேர்ந்த சூர்யா (வயது 20), தொரப்பாடி பல்லவன் நகரை சேர்ந்த குமரன் (21), வேலூரை சேர்ந்த அஜித் (18) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து சத்துவாச்சாரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தென்றல் நகர், பேஸ்-2 பகுதி ஆகிய இடங்களில் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் திருடியதும், அதனை சத்துவாச்சாரி பொன்னியம்மன் நகர் பாலாற்றங்கரையோரம் பதுக்கி வைத்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து 6 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்