வரைவு பட்டியல் வெளியீடு: நெல்லை மாவட்டத்தில் 24 லட்சத்து 94 ஆயிரத்து 694 வாக்காளர்கள் கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் 24 லட்சத்து 94 ஆயிரத்து 694 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

Update: 2018-09-01 22:30 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் 24 லட்சத்து 94 ஆயிரத்து 694 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் ஷில்பா கூறினார்.

வரைவு பட்டியல்

நெல்லை மாவட்ட வாக்காளர் வரைவு பட்டியலை கலெக்டர் ஷில்பா நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வெளியிட்டார். இதை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இதில் உதவி கலெக்டர் மைதிலி மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதியை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7 ஆயிரத்து 855 பேர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் இறப்பு, இடமாற்றம் இரட்டை பதிவுகள் ஆகிய காரணங்களினால் 7 ஆயிரத்து 888 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

48 வாக்குச்சாவடிகள்

வாக்குப்பதிவுகள் உரிய நேரத்்தில் முடிக்கவும், வாக்குப்பதிவுகளை விரைவுப்படுத்தியும் வாக்காளர் வசதிக்காக ஏற்கனவே இருந்த 2 ஆயிரத்து 931 வாக்குச்சாவடி மையங்களை மறு சீரமைத்து 2 ஆயிரத்து 979 வாக்குச்சாவடிகளாக மறு சீரமைக்கப்பட்டுள்ளது. புதிதாக 48 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

கடந்த 10-1-2018 அன்று வெளியிட்ட வாக்காளர் பட்டியலின் படி 12 லட்சத்து 29 ஆயிரத்து 65 ஆண் வாக்காளர்களும், 12 லட்சத்து 65 ஆயிரத்து 573 பெண் வாக்காளர்களும், 89 இதர வாக்காளர்களும் என மொத்தம் 24 லட்சத்து 94 ஆயிரத்து 727 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்தனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற தொடர் திருத்தத்தில் 7 ஆயிரத்து 855 புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

7 ஆயிரத்து 888 நபர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 12 லட்சத்து 29 ஆயிரத்து 203 ஆண் வாக்காளர்களும், 12 லட்சத்து 65 ஆயிரத்து 407 பெண் வாக்காளர்களும், 84 இதர வாக்காளர்களும் என 24 லட்சத்து 94 ஆயிரத்து 694 பேர் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர்.

இந்த பட்டியல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறுகின்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

இதில் பொது மக்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என சரிபார்த்து கொள்ளலாம். மேலும் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.

சிறப்பு முகாம்

புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களை வருகிற 31-10-2018 வரை வாக்குச்சாவடிகளில் வழங்கலாம்.

வருகிற 9-ந் தேதி, 23-ந் தேதி, அடுத்த மாதம் 7, 14 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. வருகிற 8-ந் தேதி, 22-ந் தேதி, அடுத்த மாதம் 6, 13 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறும். அப்போது வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

இந்த வாய்ப்பை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்