கொள்ளிடம் அணை உடைய காரணம் என்ன? அதிகாரிகள் மீது வழக்கு தொடருவேன் டிராபிக் ராமசாமி பேட்டி

முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைய காரணம் குறித்து உரிய ஆதாரங்களை திரட்டி, அதிகாரிகள் மீது வழக்கு தொடருவேன் என்று திருச்சியில் டிராபிக் ராமசாமி கூறினார்.

Update: 2018-09-01 23:15 GMT
ஜீயபுரம்,

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தற்காலிக பணி என்பது ஏமாற்று வேலை. இதற்கு நிரந்த தீர்வு ஏற்படுத்த வேண்டும். தற்காலிக சீரமைப்பு பணி 3 மாதம் கூட தாக்குப்பிடிக்காது. பல ஆண்டுகளாக இந்த அணையை பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தது தான், மதகுகள் உடைய காரணம். இது மக்கள் மீது அக்கறையில்லாத ஆட்சி நடப்பதை தான் காட்டுகிறது. மணல் மூட்டைகளை போட்டு சீரமைக்கிறேன் என்று மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யக்கூடாது. அணை உடைய காரணம் என்ன? என்பதற்கான ஆதாரங்களை நான் திரட்டி வருகிறேன்.

இது தொடர்பாக நிச்சயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு தொடருவேன். மேலும் இங்கு நடைபெறும் சீரமைப்பு பணி இன்னும் 3 மாதம் கூட தாங்காது. கொள்ளிடத்தில் நிரந்தரமாக புதிய அணை கட்டக்கோரி அவசர வழக்காக மதுரை ஐகோர்ட்டில் நாளை(திங்கட்கிழமை) வழக்கு தொடரப்போகிறேன். மதகு உடைப்புக்கு நிரந்தர தீர்வு தான் நல்லது.

மதகு உடைந்ததற்கு மணல் கொள்ளையே காரணம். தற்போதும் பாலத்தை சீரமைப்பதற்காக காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து மணல் அள்ளி வருகிறார்கள். ஆற்றில் மணல் அள்ளக்கூடாது என நீதிமன்றம் கூறி இருக்கிறது. ஆனால் அரசு பணியை காரணம் காட்டி மணல் அள்ளி வருகிறார்கள். அணையை பராமரிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நிதி என்ன ஆனது என தெரியவில்லை. கொள்ளிடம் அணையை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்