ஈரோடு ரெயில்வே காலனியில் மர்ம ‘பை’ கிடந்ததால் பரபரப்பு

ஈரோடு ரெயில்வே காலனியில் மர்ம ‘பை’ கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-01 23:00 GMT

ஈரோடு,

ஈரோடு ரெயில்வே காலனி பகுதியில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ரெயில்வே மிக்சடு பள்ளிக்கூடம் அருகில் கருப்பு நிற ‘பை’ ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது. இந்த பையை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஏதேனும் மர்ம பொருட்கள் இருக்கக்கூடும் என்று அஞ்சினார்கள்.

பின்னர் அவர்கள் இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசார் அங்கு கிடந்த பையை எடுத்து பாதுகாப்பான முறையில் சோதனையிட்டனர். அப்போது அந்த பைக்குள் துணிகள் மற்றும் அடையாள அட்டை ஒன்று இருந்தது. அந்த அட்டையில் தினேஷ்குமார், ராமமூர்த்திநகர், ஈரோடு என்றும், அவருடைய செல்போன் எண்ணும் இருந்தது.

இதனால் போலீசார் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அந்த ‘பை’ ஈரோட்டை சேர்ந்த கணேஷ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், கணேஷ் தனது பையை சென்னைக்கு அனுப்புவதற்காக தினேஷ்குமார் என்பவரிடம் கொடுத்ததும், அவர் பார்சல் அனுப்புவதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தபோது அந்த பையை மர்ம நபர் ஒருவர் திருடிச்சென்றதும் தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து அவர் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்திருந்ததும், இந்த நிலையில்தான் நேற்று காலை அந்த பையை யாரோ மர்ம நபர் அங்கு வீசிவிட்டு சென்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பையை கணேசிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் ரெயில்வே காலனி பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்