ஆரணியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
ஆரணி நகரில் 13 மற்றும் 14-வது வார்டுகளில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆரணி,
ஆரணி நகரில் 13 மற்றும் 14-வது வார்டுகளில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என்றும், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் கண்ணகி நகரில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி நகர போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.