வீரபாண்டி அருகே நவீன முறையில் கோவிலை 3½ அடி உயர்த்தும் பணி
வீரபாண்டி அருகே நவீன முறையில் கோவிலை 3½ அடி உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது.
உப்புக்கோட்டை,
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள வயல்பட்டி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த கோவில் சேதமடைந்து சாலையில் இருந்து தாழ்ந்த நிலையில் இருந்தது. இதனால் இந்த கோவிலை தரைமட்டத்தில் இருந்து உயர்த்தி கட்டவும், கும்பாபிஷேகம் நடத்தவும் கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதன்படி கோவிலின் அடிப்பகுதியில் உள்ள கற்கள் உருவப்பட்டு அதற்கு பதிலாக 200 ஜாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஜாக்கிகள் மூலம் நவீன முறையில் கோவிலை உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. கோவில் சுமார் 3½ அடி உயர்த்தப்பட உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் 1½ மாதத்தில் முடிவடைந்து விடும்.
இப்பணியை பீகார் மாநிலத்தை சேர்ந்த 25 தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். இதற்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம தலைவர் குபேந்திரபாண்டியன், கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து உள்ளனர். நவீன முறையில் கோவிலை உயர்த்தும் பணியை சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.