மத்திய பாரதீய ஜனதா ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பது போல் உள்ளது - நாராயணசாமி வேதனை

மத்திய பாரதீய ஜனதா ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பது போல் உள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-08-31 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தன்னிச்சையாக எடுத்தார். அப்போது அவர் ரூ.3 லட்சம் கோடிக்கு கருப்புபணம் இருப்பதாகவும், அதில் பெருமளவு பணம் தீவிரவாதிகள் கையில் சிக்கி இருப்பதாகவும் கூறினார். பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு அப்போதே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து அச்சடிக்கப்பட்ட பணம் ரூ.15 லட்சத்து 31 ஆயிரம் கோடியில் 93.3 சதவீத பணம் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டதாக தற்போது இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் இருந்து பிரதமர் மோடி உண்மையை மறைத்து தவறான கருத்துகளை கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். அதன்படியேதான் பின்னர் நடந்தது. அதாவது நாட்டின் பொருளாதாரம் பாதித்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வேலையில்லா திண்டாட்டம் பெருகியது. இதற்கான முழு பொறுப்பினையும் பிரதமர் ஏற்கவேண்டும்.

இப்போது பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதேபோல் விலை உயர்வு எந்த காலத்திலும் நடக்கவில்லை. நாள்தோறும் விலையை நிர்ணயிக்கும் திட்டமும் தோல்வியை தழுவியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. இதனால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வுகள் வருகிற 2019 தேர்தலில் எதிரொலிக்கும்.

தவறான பொருளாதார கொள்கையினால் ரூபாய் மதிப்பு அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதற்கும் மத்திய அரசு பொறுப்பேற்கவேண்டும். அவர்கள் காங்கிரஸ் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையையும் கேட்கவில்லை.

தற்போது 6 முற்போக்கு எழுத்தாளர்களை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். முற்போக்கு எழுத்தாளர்களை தீவிரவாதிகளோடு ஒப்பிட்டு கொச்சைப்படுத்துகிறார்கள். தனிமனித சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதா ஆட்சியில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு இருப்பதுபோல் உள்ளது.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் மேலும் 50 மாணவர்களை சேர்க்க கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றுள்ளார்கள். இதில் புதுவை அரசுக்கான இடங்களை பெறுவது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதலை கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன் அரசுக்கான இடங்களைபெற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

மேலும் செய்திகள்