அடுத்த ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு புதிய சீருடை

1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கும், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் புதிய சீருடை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Update: 2018-08-31 21:30 GMT
ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு புதிய சீருடை வழங்கப்பட உள்ளது. அது தனியார் பள்ளிச்சீருடைகளை மிஞ்சும் அளவில் சிறப்பாக இருக்கும்.

காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் தற்காலிகமாக பகுதிநேர ஆசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 -ஐ சம்பளமாக வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 2 மாத காலத்தில் அரசு சார்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 1 லட்சத்து 30ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக அரசுப்பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். சுமார் 1,250 பள்ளிகளில் சேர்க்கை விகிதம் 10-க்கும் குறைவாக இருந்ததாக குறிப்பிட்டு இருந்தோம். தற்போது அதில் 285 பள்ளிகளில் 50 முதல் 60 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

நீட் தேர்விற்காக கூடுதலாக பயிற்சி மையங்களை தொடங்க எந்த பகுதியினர் ஆர்வம் தெரிவிக்கின்றார்களோ அங்கு அரசு சார்பில் நீட் பயிற்சி மையங்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆங்கில பயிற்சி நடத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வில் ஆன்-லைன் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அப்போது அவர்களின் மதிப்பெண்களை சரி செய்யும்போது சில இடங்களில் தவறு நடந்து உள்ளது என்பதை குறிப்பிட்டு, அதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் 192 பேர் மீது தவறு இருக்கிறது என்பதை தெரிந்து 8 பேர் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்து உள்ளது.

அரசு பள்ளிகளில் கழிப்பிடங்களை சுத்தம் செய்ய தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதற்காக தொண்டு நிறுவனத்தினர் 100 வாகனங்களை தயார் செய்து வருகின்றனர். ஒரு வாகனம் 20 பள்ளிகளுக்கு சென்று கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட உள்ளது. அதை கண்காணித்து அரசிடம் தெரிவிப்பதாகவும் கூறி உள்ளனர். அந்த வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்களுக்கும் உரிய தொகையை வழங்குமாறு கேட்டு உள்ளனர். அது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்