மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி

அச்செட்டிப்பள்ளியில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2018-08-31 22:45 GMT
மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கெலமங்கலம் பக்கமுள்ளது சூதாளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 55). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும் உடன் வேலை செய்து வந்த நண்பர் பசவலிங்கப்பா (45) என்பவரும் நேற்று மோட்டார்சைக்கிளில் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அந்த நேரம் கெலமங்கலம் சாலையில் அச்செட்டிப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற லாரி மோட்டார்சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற ராமமூர்த்தி, பசவலிங்கப்பா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்து குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்