பாவூர்சத்திரம் அருகே கர்ப்பிணி மர்ம சாவு உதவி கலெக்டர் விசாரணை

பாவூர்சத்திரம் அருகே திருமணம் முடிந்து ஒரு ஆண்டில் கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.

Update: 2018-08-31 20:30 GMT
பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரம் அருகே திருமணம் முடிந்து ஒரு ஆண்டில் கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.

கர்ப்பிணி மர்ம சாவு

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் நிர்மல்சிங். இவருடைய மனைவி முத்துபிரேமா (வயது 25). இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் முத்துபிரேமா கர்ப்பமானார். 9 மாத கர்ப்பிணியான அவர் பிரசவத்திற்காக பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் மேட்டுத்தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

இதற்கிடையே முத்துபிரேமா நேற்று கழிவறைக்கு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. உடனே அவருடைய பெற்றோர் அவரை அழைத்தனர். ஆனால் முத்துபிரேமாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு முத்துபிரேமா மயங்கிய நிலையில் தரையில் விழுந்து கிடந்தார். இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே அவரை தென்காசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துபிரேமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மர்மமான முறையில் இறந்து உள்ளார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்த புகாரின்பேரில், பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நிர்மல்சிங்குக்கும், முத்துபிரேமாவுக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆவதால் இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டர் சவுந்தரராஜன் மேல் விசாரணை நடத்த உள்ளார். கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்