மாணவனை ஆசிரியர் அடித்ததால் பள்ளிக்கூடத்துக்கு சென்று பெற்றோர் தகராறு
மாணவனை ஆசிரியர் அடித்ததால் பள்ளிக்கூடத்துக்கு சென்ற பெற்றோர் தகராறில் ஈடுபட்டுனர்.
ஈரோடு,
ஈரோடு ஆசிரியர் காலனியில் அரசு உயர்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 150–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இதே பள்ளிக்கூடத்தில் ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மகன் 9–ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று முன்தினம் பள்ளியில் அறிவியல் ஆய்வு நோட்டில் பென்சிலில் எழுதும் பகுதியில் பேனாவால் எழுதி விட்டதாக தெரிகிறது. இதைப்பார்த்த அறிவியல் ஆசிரியர் மாணவனை குச்சியால் அடித்துள்ளார்.
மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் மாணவன் வீட்டிற்கு சென்றான். அப்போது அவனது முதுகில் குச்சியால் அடித்த தடிப்புகள் இருந்ததை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவனிடம் அதுபற்றி பெற்றோர் கேட்டபோது, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் அடித்த தகவலை கூறி உள்ளான்.
இந்த நிலையில் நேற்று காலை மாணவனின் பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோரிடம் போலீசார் மற்றும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியர் மாணவரின் பெற்றோரிடம், அடித்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து வீட்டுக்கு சென்றனர்.