‘பிளார்’ வெடித்து மாணவன் காயம்: மீனவ கிராமத்தில், போலீசார் வெடிகுண்டு சோதனை
ஆபத்து காலத்தில் கடலில் மீனவர்கள் பயன்படுத்தும் ‘பிளார்’ வெடித்ததில் மாணவன் காயம் அடைந்த சம்பவத்தின் எதிரொலியாக நல்லவாடு மீனவ கிராமத்தில் நேற்று போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள்.
பாகூர்,
தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், மீனவர். இவருடைய மகன் நரேந்திரன் (வயது 11), அங்குள்ள அரசு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் மாலை மாணவன் நரேந்திரன் வீட்டின் அருகே விளையாடியபோது தெருவில் ‘பிளார்’ எனப்படும் நெருப்புக்குச்சி கிடந்தது. இந்த நெருப்புக்குச்சி கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், ஆபத்து காலங்களில் உதவிகேட்டு, பயன்படுத்துவது ஆகும்.
அது நெருப்புக்குச்சி என அறியாமல் மாணவன் நரேந்திரன் அதனை எடுத்து விளையாடியபோது, அது திடீரென வெடித்தது. இதில் அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வெடிகுண்டு வெடித்ததால்தான் மாணவர் நரேந்திரன் காயம் அடைந்ததாக அந்த பகுதி மக்களிடையே பீதி கிளம்பியது. அதையடுத்து மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நேற்று காலை போலீசார் நல்லவாடு மீனவ கிராமத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டுகளை கண்டு பிடிக்க உதவி ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மற்றும் வெடிகுண்டுகளை கண்டு பிடிப்பத்தில் பயிற்சி பெற்ற மோப்ப நாய் உதவியுடன் போலீசார் மீனவ கிராமத்தின் பல்வேறு பகுதி நல்லவாடு கடற்கரை ஆகிய இடங்களில் வெடிகுண்டு சோதனை நடந்தது.
இந்த சோதனை காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.