5 ஆண்டுகளுக்கு பிறகு நிலையூர் கால்வாய்க்கு வந்தது, வைகை தண்ணீர்

5 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கால்வாய்க்கு வைகை தண்ணீர் வந்தது. இதில் மாணவர்கள், வாலிபர்கள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

Update: 2018-08-30 23:23 GMT
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் விவசாயிகளின் முதுகெலும்பாக தென்கால் கண்மாய், நிலையூர் கண்மாய், பானாங்குளம், செவந்திகுளம், ஆரியன்குளம், சிறுக் குளம் குறுக்கிட்டான்குளம் ஆகியவை உள்ளன.

கனமழை பெய்யும்போது வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் பட்சத்தில் இந்த குளங்கள், கண்மாய்கள் நிரம்பும். மழை இல்லாத காலங்களில் வயல்கள் மட்டுமல்லாது கண்மாய்களும் பாலைவனமாக மாறிவிடும். இதனால் திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. பாசனத்திற்காக வைகையில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயம் கேள்வி குறியானது. பெரும்பாலான விளைநிலங்கள் வீட்டுமனைகளானது.

ஒரு சில விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தையே நம்பி உள்ளனர்.இவர்கள் மழை நீரையும், வைகை தண்ணீரையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தேனி பகுதியில் கனமழை பெய்து வைகை அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றத்தை சுற்றி உள்ள குளம், கண்மாய்களுக்கு பிரதானமான நிலையூர் கால்வாய்க்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு வைகை தண்ணீர் வந்துள்ளது. கால்வாயில் தண்ணீர் வருவதை கண்ட மாணவர்கள், வாலிபர்கள் உற்சாகத்தில் அதில் குளித்து மகிழ்ந்துவருகின்றனர்.

இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரி மாயக்கண்ணன் கூறியதாவது:- வைகை அணை நிரம்பியதால் நிலையூர் கால்வாயை சார்ந்த 22 கண்மாய்களுக்கும் வைகை உபரி தண்ணீர் வருகிறது. குறைந்தது 5 நாட்களுக்கு குறையாமல் தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

மேலும் செய்திகள்