காலத்துக்கு ஏற்றார்போல் மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் அளிக்க வேண்டும்: அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் பேச்சு
காலத்துக்கு ஏற்றார்போல் மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் அளிக்க வேண்டும் என்று அகில இந்திய வானொலி நிலைய இயக்குனர் பழனிசாமி பேசினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் கற்பித்தலில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்த வலுவூட்டல் பயிற்சி வி.ஐ.டி.யில் நேற்று நடந்தது. பயிற்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. நிலையான ஊரக வளர்ச்சி, ஆராய்ச்சி கல்வி மைய பேராசிரியர் சுந்தர்ராஜன், வாழும் கலை அமைப்பின் பயிற்சியாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக சென்னை அகில இந்திய வானொலி (செய்திப்பிரிவு) இயக்குனர் பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-
வளர்ந்து வரும் இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருபவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கு இந்த காலத்துக்கு ஏற்றார்போல் தரமான கல்வியை ஆசிரியர்கள் அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு மாணவனையும் சிற்பமாக மாற்ற முடியும். அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களிடம் ஏராளமான திறமைகள் ஒளிந்துள்ளன. ஒவ்வொரு மாணவனும் களிமண் போன்று இருப்பார்கள், அவர்களை சிற்பமாக மாற்றும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது.
ஒவ்வொரு மாணவனுக்கும் ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன், தனது மகனுக்காக அவரது ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் நகலை முதன்மை கல்வி அலுவலரிடம் அளிக்க உள்ளேன். இதனை நகல் எடுத்து அனைத்து பள்ளிகளிலும் ஒட்ட வேண்டும். அதில், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே ஆபிரகாம் லிங்கன் தெளிவாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் ராமன் பேசுகையில், ‘ஒரு பள்ளியின் தரம் உயர தலைமை ஆசிரியர் மட்டும் பணிபுரிந்தால் போதாது. அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் பள்ளியின் தரம் உயரும். வேலூர் மாவட்டத்தில் திறமையான ஆசிரியர்கள் பலர் உள்ளனர். ஒரு வகுப்பறையில் 40 மாணவ - மாணவிகள் படிப்பார்கள். அவர்களுக்கு ஆசிரியர்கள் தாங்கள் நடத்திய பாடங்கள் புரிந்ததா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும் புரியும் வகையில் ஆசிரியர்கள் பாடங்கள் நடத்த வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் தான் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்க முடியும். ஒரு வகுப்பறையில் 40 நிமிடங்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் கவனிக்கவில்லை என்றால் அந்த அவமானம் யாருக்கு? என்பதை ஆசிரியர்கள் சிந்திக்க வேண்டும்’ என்றார்.
பயிற்சியில் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்களுக்கு மனநிம்மதிக்கான வாழ்வியல் நெறிமுறைகள், தியானம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.