கம்பம் பகுதியில் கால்நடை தீவனங்களை கொள்முதல் செய்ய கேரள வியாபாரிகள் முகாம்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரள வியாபாரிகள் கால்நடை தீவனங்களை கொள்முதல் செய்ய கம்பம் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

Update: 2018-08-30 21:41 GMT
கம்பம்,

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் மூலம் கம்பம், காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதியில் நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட பிறகு கிடைக்கக்கூடிய வைக்கோல், தட்டைகளை கால்நடைகளுக்காக விவசாயிகள் சேகரம் செய்து உள்ளூர் மட்டுமின்றி கேரளாவிற்கு லாரிகள் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

கேரளாவில் ஏலக்காய், காபி, தேயிலை, மிளகு போன்ற பணப்பயிர்களில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தட்பவெப்ப சூழ்நிலையின் காரணமாக சமதள பகுதியில் விளையக்கூடிய நெல், சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களில் மகசூல் கிடைக்காததால் அவற்றை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை, இதனால் கேரளாவில் கால்நடை வளர்ப்பவர்கள் தேனி மாவட்டம் குறிப்பாக கம்பம் பகுதியில் இருந்து தீவனங்களை மொத்தமாக வாங்கி சேகரித்து வைத்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. இதனால் கேரளாவில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வெள்ளத்தால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் வந்தன. மேலும் கால்நடைகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வைக்கோல், புண்ணாக்கு, தட்டை உள்ளிட்ட தீவனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் நெடுங்கண்டம், மாலி, உடும்பன்சோலை, கட்டப்பனை, எர்ணாகுளம், கொல்லம், சங்கனாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கேரளாவின் எல்லைப்பகுதியில் உள்ள கம்பம் பகுதியில் கால்நடை தீவனங்களை வாங்க கேரள வியாபாரிகள் முகாமிட்டு வைக்கோல், சோளத்தட்டை, கம்பு, புண்ணாக்கு உள்ளிட்ட கால்நடை தீவனங்களை கொள்முதல் செய்து லாரிகளில் ஏற்றிச்செல்கின்றனர்.

இதுகுறித்து தீவன வியாபாரிகள் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பால் கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல், சோளம், கம்பு உள்ளிட்ட தீவனங்களை வாங்க தற்போது கம்பம் பகுதியில் கேரள வியாபாரிகள் முகாமிட்டுள்ளனர். இதனால் தற்போது இத்தொழிலை நம்பியுள்ள 200-க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்