ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக சி.கதிரவன் பொறுப்பு ஏற்றார்

விவசாயம் மற்றும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பு ஏற்றிருக்கும் சி.கதிரவன் கூறினார்.

Update: 2018-08-30 23:30 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர் டாக்டர் எஸ்.பிரபாகர். இவர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக பணியிட மாறுதல் பெற்று உள்ளார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த சி.கதிரவன் ஈரோடு மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டார்.

அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தின் புதிய கலெக்டராக சி.கதிரவன் நேற்று காலை பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடம் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா பொறுப்புகளை ஒப்படைத்தார். நிகழ்ச்சியின் போது ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆர்.நர்மதாதேவி ஆகியோர் உடன் இருந்தனர். கோப்புகளில் கையொப்பமிட்டு பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட மாவட்டம். எனவே விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் மேற்கொள்ளப்படும். அதுபோல் சுகாதாரத்தை பேண முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அரசின் அனைத்து திட்டங்களும் மக்களை முழுமையாக சென்று சேர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் புகார்கள், பிரச்சினைகளை தெரிவித்தால், அதுகுறித்து ஆய்வு செய்து உரிய தீர்வு காணப்படும்.

இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

புதிய கலெக்டராக பொறுப்பு ஏற்று இருக்கும் சி.கதிரவன் ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராவார். இவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் முதுகலை வேளாண்மை பட்டதாரி. இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை கலெக்டராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார். சுனாமியின்போது சிறப்பு துணை கலெக்டராக பணியாற்றி பாதிக்கப்பட்டவர்கள் நலத்திட்டங்கள் பெற உதவினார். பின்னர் 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற இவர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் இருந்தார். 2013-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குனராக இருந்தார். பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக பதவி ஏற்றார். அங்கிருந்து ஈரோடு மாவட்டத்தின் 33-வது கலெக்டராக பொறுப்பு ஏற்று உள்ளார்.

இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

புதிய கலெக்டர் சி.கதிரவனுக்கு நேற்று அனைத்து துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்