அந்தியூர் அருகே மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்
அந்தியூர் அருகே மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தியூர்,
அந்தியூர் வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் நேற்று காலை அந்தியூர் அருகே உள்ள கெட்டிச்சமுத்திரம் ஏரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 டிராக்டர்கள் வந்தன. அந்த டிராக்டர்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது டிராக்டர்களில் மணல் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அந்தியூர் அருகே கெட்டிச்சமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து மணலை வெட்டி எடுத்து டிராக்டர் களில் அந்தியூர் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மணல் கடத்திய 2 டிராக்டர்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி அந்தியூர் தாசில்தார் பாலகுமரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தாசில்தார் பாலகுமரன் அங்கு சென்று டிராக்டர்கள் மற்றும் கடத்தி வரப்பட்ட மணலை பார்வையிட்டார்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 2 டிராக்டர்களும் அந்தியூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மணல் கடத்தி வந்த டிராக்டர்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.