வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில் 4-வது நாளாக தொடரும் மழை
வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில் 4-வது நாளாக மழை பெய்து வருகிறது.
குடகு,
வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில் 4-வது நாளாக மழை பெய்து வருகிறது.
வெள்ளம்-நிலச்சரிவு
குடகு மாவட்டத்தில் 20 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை தாலுகாக்களில் 50-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் பெருமளவில் வெள்ளம், நிலச்சரிவால் உருக்குலைந்துபோய்விட்டன. அந்தப் பகுதிகளில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உறவுகள், உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 51 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழைக்கு 186 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன. 924 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2,225 கிலோ மீட்டர் சாலைகள் மண் அரிப்பாலும், நிலச்சரிவாலும் நிலைகுலைந்து போய் காட்சி அளிக்கின்றன. குறிப்பாக மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 20 நாட்களாக கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அதுபோக 240 பாலங்களும், நூற்றுக்கணக்கான மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக மடிகேரி தாலுகாவில் உள்ள மக்கந்தூர், முக்கொட்லு, கல்லூர், அட்டிஒலே, அலமேறி, காளிபீடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இதுதவிர பல ஆயிரம் ஏக்கரில் காபி, நெல், குருமிளகு பயிர்களும் நாசமாகியுள்ளன.
மறுசீரமைப்பு பணிகள்
மழையின் கோரதாண்டவத்தில் சிக்கி உருக்குலைந்த குடகில் கடந்த ஒருவாரமாக மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல் சேதமடைந்த பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் உணவு, அரிசி, பருப்பு, துணிமணிகள், வீட்டு உபயோகப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தில் வீடுகள், உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியிருந்து வரும் மக்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பாடப்புத்தகங்களை இழந்த பள்ளி குழந்தைகளுக்கு அரசு சார்பில் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, கடந்த 23-ந்தேதி முதல் வகுப்புகள் நடந்து வருகின்றன.
வெள்ளம் வடிந்ததைதொடர்ந்து அந்தப் பகுதி சேர்ந்த மக்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் மட்டும் இன்னும் முகாம்களில் தங்கியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்காலிகமாக அரசு சார்பில் அலுமினிய கொட்டகைகள் அமைத்துக்கொடுக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 42 ஏக்கர் பரப்பளவில் 760 வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சேதமடைந்த சாலைகள், மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் மண் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி, சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது.
உடல்கள் தேடும் பணி
மேலும் மாயமான 4 பேரின் உடல்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக மக்கந்தூர், முக்கொட்லு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஹெலிகேமராக் கள் உதவியுடன் உடல்களை மீட்கும் பணி நடக்கிறது. அதுபோல் மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண பொருட்கள், நிதி உதவி வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வெள்ளம் வடிந்த பகுதிகளில் மக்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளதால், அவர்களது வீடுகளுக்கே சென்று அரசு சார்பில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, ராகி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் உடல் ஆரோக்கியத்திற்காகவும், வெள்ள சேத பாதிப்புகளில் இருந்து அவர்கள் வெளியே வருவதற்காகவும் தியானம், யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு புத்துணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மடிகேரியில் உள்ள ஒரு முகாமில் 200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு தற்காலிகமாக 3 குளியல் அறை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தங்கியுள்ள மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் நேற்று அந்த முகாமில் தங்கியுள்ள மக்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.
4-வது நாளாக மழை
இதற்கிடையே குடகு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மீட்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த நிலையில் 4-வது நாளாக நேற்றும் குடகு மாவட்டத்தில் மடிகேரி, பாகமண்டலா, முக்கொட்லு, மக்கந்தூர், மாதாபுரா, சுண்டிகொப்பா, சித்தாபுரா மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் காபி தோட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.