சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானங்களில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் செல்ல வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முனுசாமி (வயது 62) என்பவர் அந்த விமானத்தில் வந்திருந்தார். அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் எதுவும் இல்லை.
ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணம்
இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அப்போது அவரது உள்ளாடைகளில் 27 ஆயிரம் சவுதி ரியால்கள் மறைத்து வைத்து கடத்த முயன்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து முனுசாமியின் விமான பயணத்தை ரத்து செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் கடத்த முயன்றது ஹவாலா பணமா? அவர் யாருக்காக அந்த பணத்தை சிங்கப்பூருக்கு கடத்திச்செல்ல முயன்றார்? என விசாரித்து வருகின்றனர்.