துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 100-வது நாள்: தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கிறிஸ்தவ ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 100-வது நாளையொட்டி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் கிறிஸ்தவ ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

Update: 2018-08-29 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 100-வது நாளையொட்டி தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் கிறிஸ்தவ ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இந்த சம்பவம் நடந்து நேற்றுடன் 100 நாள் முடிவடைந்தது.

இதையொட்டி, நேற்று சின்னக்கோவில் ஆலயத்தில் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாவட்ட முதன்மை குரு கிருபாகரன், பங்குதந்தை ரோலிங்டன் மற்றும் 16 பாதிரியார்கள் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினர். இதேபோன்று தூத்துக்குடியில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு திருப்பலி நடந்தது.

பாதுகாப்பு

மேலும் தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் மேற்பார்வையில், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆகியோர் தலைமையில் தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 33 இன்ஸ்பெக்டர்கள், 72 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய இடங்களில் வீடியோ பதிவு செய்வதற்காக 30 போலீஸ் வீடியோகிராபர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அ.ம.மு.க. அலுவலகம் முன்பு நடந்தது. மாவட்ட செயலாளர் ஹென்றிதாமஸ் தலைமை தாங்கி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில், பகுதி செயலாளர் எட்வின்பாண்டியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்