களியக்காவிளை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் துணிகர கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

களியக்காவிளை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-08-29 22:15 GMT
களியக்காவிளை,

களியக்காவிளையை அடுத்த குறுமத்தூர் குழித்தட்டுவிளையை சேர்ந்தவர் ஜெயராஜ். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஹேமலதா (வயது 30). கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பதால் இரவு நேரத்தில் ஹேமலதா தன்னுடைய வீட்டில் தங்குவது கிடையாது. பாதுகாப்பு கருதி அதே பகுதியில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்று அவர் தூங்குவது வழக்கம். அதேபோல் நேற்றுமுன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு ஹேமலதா தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

கொள்ளை

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டின் கிரில் கேட் மற்றும் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த அலமாரியை உடைத்து அதிலிருந்த ரூ.8 ஆயிரத்து 500-ஐ திருடியுள்ளனர். தொடர்ந்து பீரோக்களை உடைத்துள்ளனர். ஆனால் நகை எதுவும் சிக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டனர். நேற்று காலையில் வீட்டுக்கு வந்த ஹேமலதா, கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஹேமலதாவின் வீட்டில் இரவு நேரத்தில் யாரும் தங்குவது கிடையாது என்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்