காஞ்சீபுரம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த வாகன சோதனை மையங்கள்
காஞ்சீபுரம் நகரத்தை பிளாஸ்டிக் மாசில்லா காஞ்சீபுரம் என உருவாக்க நரக எல்லைகளில் வாகன சோதனை மையங்களை கலெக்டர் பா.பொன்னையா திறந்து வைத்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நகரத்தை பிளாஸ்டிக் மாசில்லா காஞ்சீபுரம் என உருவாக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி காஞ்சீபுரம் நகரத்தில் நுழையும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை செய்து, பிளாஸ்டிக் பைகளை அப்புறப்படுத்தி, மாற்றாக துணி, காகித மற்றும் சணல் பைகள் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொன்னேரிக்கரை, பெரியார் நகர் மற்றும் செவிலிமேடு பகுதிகளில் காஞ்சீபுரம் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாகன சோதனை மையங்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா திறந்து வைத்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அந்த வழியாக சென்ற வாகனங்களை சோதனையிட்டு பயணிகளிடம் ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுபிரசுரங்கள் வினியோகித்தார்.
பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணி, சணல் மற்றும் காகித பைகள் உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதுடன் அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகித பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுபடி தமிழகம் முழுவதும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பணிகள், பேரணிகள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் பணியாளர்கள் வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்கான மாற்று பொருட்கள் குறித்தும் விளக்கம் அளிப்பார்கள். மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும், வணிக நிறுவனங்களிலும் அரசு அலுவலர்கள் மூலமாக தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் சுகாதார கேடுகளை அறிந்து எதிர்காலத்தில் ஆரோக்கியமான சூழலில் வாழ்கின்ற அளவில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதுடன் பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்க பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.