மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி: தட்டிக் கேட்ட காதலியை தாக்கிய டிரைவர் சகோதரருடன் கைது

ஊத்துக்கோட்டை அருகே மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதை, தட்டிக் கேட்ட காதலியை தாக்கிய டிரைவர் சகோதரருடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-29 22:00 GMT

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மகன் சக்திவேல் என்ற இமானு (வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவருடன் இமானுக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் தீவிரமாக காதலித்தனர். ‘‘திருமணம் என்றால் உன்னோடுதான் என்று இமானு ஆசை வார்த்தைகள் கூறியதால் அந்த பெண் மிக நெருக்கமாக பழகினார்’’.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இமானு அந்த பெண்ணை சந்திப்பதை தவிர்த்து வந்தார். மேலும் அந்த பெண், போன் செய்தால் பேசுவது இல்லை.

இந்த நிலையில் இமானுக்கு அவரது பெற்றோர்கள் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

இதை அறிந்த இமானுவின் காதலி 2 நாட்களுக்கு முன் இமானுவின் வீட்டுக்கு சென்றார். ‘3 ஆண்டுகளாக என்னை காதலித்து வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள முயற்சிப்பது நியாயம்தானா’ என்று கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இமானு, அவரது சகோதரர் இன்பரசன் (22) ஆகியோர் சேர்ந்து அந்த பெண்ணை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து இமானு, இன்பரசன் ஆகியோரை கைது செய்தார். பின்னர் போலீசார் அவர்களை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்